செவ்வாய், ஜனவரி 3

திருக்குறளும் அதன் உரை விளக்கமும்}}}}}}401-410

பொருட்பால் அரசியல் கல்லாமை;;;;;;;;;;;;;;;


குறள் 401:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
உரை:
நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.


 குறள் 402:
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
உரை:
கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.


 குறள் 403:
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
உரை:
கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்.


 குறள் 404:
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
 உரை:
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.


 குறள் 405:
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
உரை:
கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்.


 குறள் 406:
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
 உரை:
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.


 குறள் 407:
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.
உரை:
அழகான தோற்றம் மட்டுமே இருந்து, ஆழ்ந்து தெளிந்த அறிவில்லாமல் இருப்பவர்கள், கண்ணைக் கவரும் மண் பொம்மையைப் போன்றவர்களாகவே மதிக்கப்படுவார்கள்.


 குறள் 408:
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
 உரை:
முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.


 குறள் 409:
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
 உரை:
கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்.


 குறள் 410:
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
உரை:
மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.



  எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy..............