புதன், நவம்பர் 16

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}21-40

அறத்துப்பால் பாயிரவியல் நீத்தார் பெருமை...........


குறள் 21:  
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து 
வேண்டும் பனுவல் துணிவு.  

விளக்கம்: 
தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

குறள் 22:  
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து 
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.  

விளக்கம்:  
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத்தான் உண்மையாகவே பற்றுகளைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.


 குறள் 23;
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் 
பெருமை பிறங்கிற்று உலகு.  

விளக்கம்:  
பிறப்பு, வீடுகளின் தன்மைகளை ஆராய்ந்து அறிந்து, இப்பிறப்பில் துறவு மேற்கொண்டவரின் பெருமையே இவ்வுலகில் உயர்ந்தது.

குறள் 24:  
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் 
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.  

விளக்கம்:  
அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.

குறள் 25:  
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் 
இந்திரனே சாலுங் கரி.  

விளக்கம்:  
ஐம்புல ஆசைகளையும் அடக்கியவனின் பெருமைக்கு, தேவர் தலைவனாகிய இந்திரனே தகுந்த சான்றாவான்.

குறள் 26:  
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் 
செயற்கரிய செய்கலா தார்.  

விளக்கம்;  
செய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

குறள் 27:  
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் 
வகைதெரிவான் கட்டே உலகு.  

விளக்கம்: 
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.


குறள் 28:  
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 
மறைமொழி காட்டி விடும்.  

விளக்கம்:  
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

குறள் 29:  
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 
கணமேயும் காத்தல் அரிது.  

விளக்கம்:  
குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

குறள் 30:  
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் 
செந்தண்மை பூண்டொழுக லான்.  

விளக்கம்; 
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

அறத்துப்பால் பாயிரவியல் அறன்வலியுறுத்தல்................

குறள் 31:   
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு 
ஆக்கம் எவனோ உயிர்க்கு.   

விளக்கம்:  
அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?

குறள் 32:  
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை 
மறத்தலின் ஊங்கில்லை கேடு.  

விளக்கம்:  
நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

.குறள் 33:  
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.  

விளக்கம்:  
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

.குறள் 34:  
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் 
ஆகுல நீர பிற.  

விளக்கம்:  
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

குறள் 35:  
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம்.  


விளக்கம்:  
அறம் என்று சொல்லப்படுவது பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கையும் நீக்கி நடைபெறுவதாகும்.

குறள் 36:   
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது 
பொன்றுங்கால் பொன்றாத் துணை.   

விளக்கம்: 
முதுமையில் செய்யலாம் என எண்ணாமல் இப்போதே அறத்தைச் செய்க; அந்த அறம் நாம் அழியும் போது தான் அழியாமல் நமக்கு துணை ஆகும்.

 குறள் 37:  
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.   

விளக்கம்: 
அறத்தைச் செய்வதால் வரும் பயன் இது என்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியது இல்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணிப்பவனையும் கண்ட அளவில் பயனை அறியலாம்.


குறள் 38:  
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 
வாழ்நாள் வழியடைக்கும் கல்.   

விளக்கம்; 
பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

குறள் 39:  
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் 
புறத்த புகழும் இல.   

விளக்கம்;  
தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

குறள் 40:  
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 
உயற்பால தோரும் பழி.   


விளக்கம்:  
ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.


எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள்.தொடரும்.....{அறத்துப்பால் இல்லறவியல் இல்வாழ்க்கை }samy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக