ஞாயிறு, டிசம்பர் 4

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}281-290

அறத்துப்பால் துறவறவியல் கள்ளாமை,,,,,,,,,,,,,,,,,,



குறள் 281:
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

விளக்கம் :
அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.

குறள் 282:
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

விளக்கம் :
பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.

குறள் 283:
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

விளக்கம் :கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

குறள் 284:
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

விளக்கம் :
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

குறள் 285:
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

விளக்கம் :
மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

குறள் 286:
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

விளக்கம் :
உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.

குறள் 287:
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

விளக்கம் :
அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.

குறள் 288:
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

விளக்கம் :
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.

குறள் 289:
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

விளக்கம் :
அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.

குறள் 290:
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.

விளக்கம் :
களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.

எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக