வியாழன், டிசம்பர் 1

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}271-280

அறத்துப்பால் துறவறவியல் கூடாவொழுக்கம்.................




குறள் 271:  
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் 
ஐந்தும் அகத்தே நகும். 


விளக்கம் :  
வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.   


குறள் 272:  
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் 
தான்அறி குற்றப் படின்.  


விளக்கம் :  
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.  


குறள் 273:  
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. 


விளக்கம் :  
கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.  


குறள் 274:  
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து 
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.


விளக்கம் :  
புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈ.டுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.  


குறள் 275:  
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று 
ஏதம் பலவுந் தரும்.  


 விளக்கம் :  
எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.  


குறள் 276:  
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து 
வாழ்வாரின் வன்கணார் இல்.  


விளக்கம் :  
மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.  


குறள் 277:  
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி 
முக்கிற் கரியார் உடைத்து.  


விளக்கம் :  
வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.  


குறள் 278: 
மனத்தது மாசாக மாண்டார் நீராடி 
மறைந்தொழுகு மாந்தர் பலர்.  


விளக்கம் :  
மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.  


குறள் 279:  
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன 
வினைபடு பாலால் கொளல்.  


விளக்கம் :  
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.  


குறள் 280:  
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
பழித்தது ஒழித்து விடின்.  


விளக்கம் :  
உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக