ஞாயிறு, நவம்பர் 20

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}101-130

 அறத்துப்பால் இல்லறவியல் செய்ந்நன்றி அறிதல்.........................


குறள் 101:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

விளக்கம்:
வாராது வந்த மாமணி ( என்பதுபோல், செய்யாமற் செய்த உதவி) என்று புகழத்தக்க அரிய உதவி வழங்கப்பட்டால், அதற்கு இந்த வானமும் பூமியும் கூட ஈடாக மாட்டா.

குறள் 102:
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

விளக்கம்:
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்.

குறள் 103:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

விளக்கம்:
என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது.

குறள் 104:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

விளக்கம்:
ஒருவர் செய்யும் தினையளவு நன்மையைக்கூட அதனால் பயன்பெறும் நன்றியுள்ளவர் பல்வேறு வகையில் பயன்படக்கூடிய பனையின் அளவாகக் கருதுவார்.

குறள் 105:
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

விளக்கம்:
உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

குறள் 106:
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

விளக்கம்:
மாசற்றவர்களின் உறவை மறக்கவும் கூடாது; துன்பத்தில் துணை நின்றவர் நட்பைத் துறக்கவும் கூடாது.

குறள் 107:
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

விளக்கம்:
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது,

குறள் 108:
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.


விளக்கம்:
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

விளக்கம்:
ஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது.

குறள் 110:
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

விளக்கம்:
எந்த அறத்தை மறந்தார்க்கும் வாழ்வு உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தார்க்கு வாழ்வில்லை.



அறத்துப்பால் இல்லறவியல் நடுவு நிலைமை.................... 




குறள் 111:
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

விளக்கம்:
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.

குறள் 112:
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

விளக்கம்:   
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

குறள் 113:
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

விளக்கம்:
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்.

குறள் 114:
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.


விளக்கம்:
இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்,

குறள் 115:
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

விளக்கம்:
தீமையும் நன்மையும் எல்லார்க்கும் முன்பே குறிக்கப்பட்டு விட்டன; இதை அறிந்து நெஞ்சத்தால் நீதி தவறாது இருப்பது சான்றோர்க்கு அழகாகும்.  

குறள் 116:
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

விளக்கம்:
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்

குறள் 117:
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

விளக்கம்:
நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது.

குறள் 118:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.


விளக்கம்:
ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.


குறள் 119:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

விளக்கம்:  
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.

குறள் 120:
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்.  விளக்கம்:   பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்,




அறத்துப்பால் இல்லறவியல் அடக்கமுடைமை................


குறள் 121:
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

விளக்கம்:
அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

குறள் 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

விளக்கம்:
மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.

குறள் 123:
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

விளக்கம்:
அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

குறள் 124:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

விளக்கம்:
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.  Devi படுகை ஏணி.

 குறள் 125:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

விளக்கம்:
செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.

குறள் 126:
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து.

விளக்கம்:
உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.

குறள் 127:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

விளக்கம்:
ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.

குறள் 128:
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

விளக்கம்:
தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்,

குறள் 129:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

விளக்கம்:
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.

குறள் 130:
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.


விளக்கம்:
கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.








             எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்.....
                                           {அறத்துப்பால் இல்லறவியல் ஒழுக்கமுடைமை}....................samy



1 கருத்து: